குடும்பச் சுகாதாரப் பணியகமானது இலங்கையில் மகப்பேற்று, சிறுவர் சுகாதாரத்திற்கான (மசிசு) மிகச்சிறப்பு வாய்ந்த மத்திய நிலையமாக விளங்குகின்றது. இது, நாடளாவிய ரீதியில் மசிசு நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்தும் முகமாக சுகாதார அமைச்சினுள் 1968 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது. இது ஆரம்பத்தில், மகப்பேற்று சிறுவர் சுகாதாரப் பணியகம் என அழைக்கப்பட்டது. அதன் பின்னர் குடும்பச் சுகாதாரப் பணியகம் என மீள்பெயர் குறித்து அழைக்கப்பட்டது.


மகப்பேற்று சுகாதாரம், சிறுவர் சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகியன இலங்கையின் சுகாதார அமைச்சில் நிலவுகின்ற சுகாதாரப் பராமரிப்பு முறைமையின் முக்கிய அங்கங்களாக அமைப்புப் பெறுகின்றன. சுகாதார அமைச்சினதும் மாகாண சுகாதார சேவைகளை வழங்கும் அமைப்புகளினதும் நன்கு வளர்ச்சியடைந்த உட்கட்டமைப்பு வசதிகளினூடாக இந்தச் சேவைகள் வழங்கப் படுகின்றன. இந்த சுகாதார அமைச்சும் மாகாண சுகாதார சேவைகளை வழங்கும் அமைப்புகளும் பல மருத்துவ நிறுவனங்களினது வலையமைப்பையும், சுகாதாரப் பிரிவுகளினது மருத்துவ சுகாதார அலுவலர்களையும் (மசுஅ) உள்ளடக்குகின்றன.